அம்மன் உருவத்துடன் பழமையான 6 கற்சிலைகள் கண்டெடுப்பு


அம்மன் உருவத்துடன் பழமையான 6 கற்சிலைகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 25 Jun 2021 11:59 PM IST (Updated: 26 Jun 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது அம்மன் உருவத்துடன் பழமையான 6 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டை சேர்ந்தவர் ராமசாமி. இவர் குரும்பலூரில் பெரம்பலூர்- துறையூர் மெயின்ரோடு அருகே செல்லம் என்ற பெண்ணின் வீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பாக விலைக்கு வாங்கினார். இந்த நிலையில் ராமசாமியின் மகன் வெங்கடேசன் (வயது 26) புது வீடு கட்டுவதற்காக, அந்த பழைய வீட்டை இடிக்கும் பணியை தொழிலாளர்களை கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினார். பழைய வீடு இடிக்கும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அம்மன் உருவத்துடன்...
கடப்பாரையால் குழி தோண்டியபோது திடீரென சத்தம் கேட்டது. பின்னர் தொழிலாளர்கள் அங்கு மண்வெட்டியால் மண்ணை அள்ளியபோது பழமையான 5 கற்சிலைகள் தென்பட்டன. அந்த கற்சிலைகளில் அம்மன் உருவம் இடம்பெற்றிருந்தது.
இந்த தகவல் ஊர் மக்களிடையே காட்டுத்தீ போல் பரவியதை தொடர்ந்து சிலைகளை காண பொதுமக்கள் அங்கு கூடினர். அதனை தொடர்ந்து அந்த இடத்தில் அஸ்திவாரம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.
எந்த காலத்தை சேர்ந்தது?
பின்னர் நேற்று மீண்டும் தொழிலாளர்கள் அந்த இடத்தில் தோண்டியபோது அம்மன் உருவம் இடம்பெற்றிருந்த மற்றொரு கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து வெங்கடேசன் உடனடியாக பெரம்பலூர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அங்கு சென்ற வருவாய்த்துறையினர், அந்த கற்சிலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த கற்சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story