இந்து முன்னணியினர் போராட்டம்
கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
அரியலூர்:
போராட்டம்
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும், வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதிக்காததால், அவை தற்போதும் மூடப்பட்டு காட்சியளிக்கின்றன. இந்த நிலையில் கோவில்களை திறக்க தமிழக அரசை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர். இதில் அரியலூரில் கோவில்களை திறக்கக்கோரி சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள் முன்பு சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர். இதில் இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யம்பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
ஜெயங்கொண்டம் சிவன் கோவிலில் மாநில செயற்குழு உறுப்பினர் ராம.பாலமுருகன் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மதுக்கடை மூலம் பரவாத கொரோனா?, புனிதமான கோவில் மூலம் பரவுமா? என்று கோஷமிட்டனர். பின்னர் பூட்டி இருந்த கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி நூதன முறையில் வழிபாடு செய்தனர். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மீன்சுருட்டி, தா.பழூர், கீழப்பழுவூர்
மீன்சுருட்டி அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் முன்பாக இந்து முன்னணியின் மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி தலைமையில், கிளை தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கற்பூரம் ஏற்றி போராட்டம் நடத்தினர். தா.பழூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் தா.பழூரில் சிவன் கோவில் முன்பு நடந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். இதில் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமானூரில் ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கைலாசநாதர் கோவில் முன்பு சூடம் ஏற்றி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் திருமழபாடி மற்றும் கீழப்பழுவூர் சிவன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவன் மற்றும் பெருமாள் கோவில் முன்பு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் அசோக்ஜீ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story