கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
கண்டன ஆர்ப்பாட்டம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் கோவில்கள் மூடப்பட்டன. ஆகம விதிகள் படி கோவிலில் பூஜை மட்டும் நடத்தப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் கோவில்களை திறக்க வலியுறுத்தியும், சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க கோரியும் தமிழகம் முழுவதும் நேற்று இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்கள் முன்பு இந்து முன்னணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் தர்மபுரி எஸ்.வி. ரோட்டில் உள்ள சாலை விநாயகர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோவிலை திறக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. இதில் நகர செயலாளர் இளையராஜா, நிர்வாகிகள் சரவணன், சச்சின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதியமான்கோட்டை
இதேபோன்று அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவில் முன்பு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வேடியப்பன் தலைமையிலும், தர்மபுரி கோட்டை வரமஹாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சாமி கோவில் முன்பு ஒன்றிய செயலாளர் பிரபு தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் முன்பு மாவட்ட செயலாளர் ராஜி தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோவில்களை திறக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story