உயிர் உரங்களை பயன்படுத்தி நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம்-வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
உயிர் உரங்களை பயன்படுத்தி நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம் என கொல்லிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா தெரிவித்துள்ளார்.
நாமக்கல்,
கொல்லிமலை வட்டாரத்தில் தற்போது கார் பருவத்திற்கான நெல் சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளது. நெற்பயிர்களில் உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த செலவில், அதிக மகசூல் பெற முடியும்.
ஒரு ஏக்கருக்கு தேவையான விதை நெல்லுடன் உயிர் உரங்களான 2 பொட்டலம் அசோஸ்பைரில்லம் மற்றும் 2 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்களை கலக்க வேண்டும். இதனை 24 மணி நேரம் ஊரவைத்து பின்பு விதைப்பு செய்யலாம். அல்லது 2 பொட்டலம் அசோஸ்பைரில்லம் மற்றும் 2 பொட்டலம் பாஸ்போபாக்டீரியாவை நாற்றுக்களின் வேர்களில் 10 முதல் 15 நிமிடங்கள் நனையுமாறு வைத்து பின்பு நடவு செய்யலாம்.
மேலும் ஒரு ஏக்கருக்கு 4 பொட்டலம் அசோஸ்பைரில்லம் மற்றும் 4 பொட்டலம் பாஸ்போபாக்டீரியாவை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் நடவு செய்வதற்கு முன் இடலாம். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா கொல்லிமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதனை விவசாயிகள் தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story