முன்னாள் பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் 2 பேர் சுட்டுப்பிடிப்பு
பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்திய மாநகராட்சி முன்னாள் பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
முன்னாள் கவுன்சிலர் கொலை
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட செலுவாதி பாளையா வார்டு முன்னாள் கவுன்சிலர் ரேகா. பா.ஜனதா கட்சியை சேர்ந்த இவர், காட்டன்பேட்டை அருகே பிளவர் கார்டனில் வசித்து வந்தார். அதே பகுதியில் தான் ரேகாவின் அலுவலகமும் உள்ளது. ரேகாவின் கணவர் கதிரேஷ்.
இவரது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். ரவுடியாக இருந்து அரசியலுக்கு வந்த கதிரேஷ் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டு இருந்தார். இதற்கிடையில், நேற்று முன்தினம் காலையில் பிளவர் கார்டனில் உள்ள தனது அலுவலகம் முன்பாகவே ரேகா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். ரேகாவை, அதே பகுதியை சேர்ந்த பீட்டர், சூர்யா உள்ளிட்டோர் கொலை செய்திருந்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் கொலையாளிகளை பிடிக்க கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் மேற்பார்வையில், மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
50 பேரிடம் விசாரணை
அதாவது காட்டன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதானந்தமூர்த்தி, மற்றும் இன்ஸ்பெக்டர்களான குமாரசாமி, பிரசாந்த், திப்பேசாமி, சந்திரகாந்த், லோகாப்பூர் ஆகிய 6 பேர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு தனிப்படை போலீசார் தலைமறைவாகி விட்ட பீட்டர், சூர்யா உள்ளிட்டோரை கைது செய்ய தீவிரம் காட்டினார்கள். அதே நேரத்தில் மற்றொரு தனிப்படை போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அத்துடன் ரேகா கொலை சம்பந்தமாக, அவரது கணவர் கதிரேசின் சகோதரி மாலா உள்பட 50 பேரை பிடித்து நேற்று முன்தினமே போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். அவர்களில் 11 பேர் மீது எந்த சந்தேகமும் வராத காரணத்தால், அவர்களிடம் விசாரித்துவிட்டு போலீசார் அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் மற்ற 39 பேரையும் போலீசார் விடுவிக்காமல் தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்து விசாரணையை தொடங்கினார்கள்.
கொலையாளிகள் பற்றி தகவல்
இந்த விசாரணையின் போது போலீசாருக்கு முக்கிய துப்பு கிடைத்தது. அதாவது ரேகாவின் கொலைக்கு முக்கியமாக 3 காரணங்கள் இருந்தது தெரியவந்தது. அதாவது பணப்பிரச்சினை, குடும்ப விவகாரம் மற்றும் மாநகராட்சி தேர்தல் விவகாரம் என்பதை போலீசார் உறுதி செய்தார்கள்.
இந்த 3 கோணத்திலேயே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். மேலும் கொலையாளிகளான பீட்டர், சூர்யா ஆகிய 2 பேரும் பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு தப்பி சென்றிருப்பது பற்றி தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஒரு தனிப்படை போலீசார் ஓசூர் விரைந்தனர். பின்னர் நேற்று காலையில் எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் 2 பேரும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் செல்வதற்குள் பீட்டரும், சூர்யாவும் தப்பி சென்றிருந்தனர். பின்னர் நேற்று காலை 11.30 மணியளவில் காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாகடி ரோடு, சுங்கதகட்டே பகுதியில் உள்ள மைதானத்தில் பீட்டரும், சூர்யாவும் தலைமறைவாக இருப்பதை போலீசார் உறுதி செய்தார்கள்.
2 பேர் சுட்டுப்பிடிப்பு
உடனே இன்ஸ்பெக்டர்கள் சிதானந்தமூர்த்தி, திப்பேசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றார்கள். அப்போது பீட்டரும், சூர்யாவும் மதுஅருந்திவிட்டு குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. உடனே அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். உடனே தங்களிடம் இருந்த ஆயுதங்களால் சப்-இன்ஸ்பெக்டர் கரியண்ணா, போலீஸ் ஏட்டு சந்திரசேகரை பீட்டரும், சூர்யாவும் தாக்கினார்கள். இதில், 2 போலீசாருக்கும் கையில் காயம் ஏற்பட்டது.
உடனே வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு சரண் அடைந்துவிடும்படி இன்ஸ்பெக்டர்கள் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் மீண்டும் போலீசாரை தாக்கியதுடன், அங்கிருந்து தப்பித்து ஓடவும் முயன்றார்கள். உடனே இன்ஸ்பெக்டர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் 2 பேரையும் நோக்கி சுட்டார்கள். இதில், பீட்டர், சூர்யாவின் கால்களில் குண்டு துளைத்தது. இதனால் 2 பேரும் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார்கள். அவர்களை போலீசார் பிடித்து கைது செய்தார்கள்.
பீட்டர் மீது 6 வழக்குகள்
பின்னர் பீட்டர், சூர்யா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல், காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கரியண்ணா, ஏட்டு சந்திரசேகரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். முன்னதாக துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முன்னாள் கவுன்சிலர் ரேகா கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பீட்டர் (வயது 46), சூர்யா (20) ஆகிய 2 பேரையும் போலீசார் தற்காப்புக்காக சுட்டுப்பிடித்துள்ளனர். கைதான பீட்டர் மீது 3 கொலை, 1 தாக்குதல், 2 கொள்ளை முயற்சி ஆகிய 6 வழக்குகள் உள்ளன. சூர்யா மீது 2 கொலை, 2 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கைதான 2 பேரிடமும் முன்னாள் கவுன்சிலர் கொலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
பரபரப்பு
மாநகராட்சி முன்னாள் பெண் கவுன்சிலர் கொலையில் 2 பேர் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story