பெங்களூருவில் முன்னாள் பெண் கவுன்சிலர் கொலை செய்யப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு
பெங்களூருவில் முன்னாள் பெண் கவுன்சிலரான ரேகாவை 2 நபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தடுக்க சென்றவரையும், கொலையாளிகள் தாக்க முயன்றது தெரியவந்தது.
பெங்களூரு:
முன்னாள் கவுன்சிலர் கொலை
பெங்களூரு மாநகராட்சி செலுவாதி பாளையா வார்டு முன்னாள் கவுன்சிலரான ரேகா நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில், காட்டன்பேட்டை அருகே பிளவர் கார்டனில் உள்ள அவரது அலுவலகத்திற்கு முன்பாக வைத்தே 2 பேரால் குத்திக் கொலை செய்யப்பட்டு இருந்தார்.
கொலை செய்வதற்கு முன்பாக ரேகாவின் அலுவலகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில், எந்த காட்சிகளும் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக கேமராக்களை மேல் பக்கமாக கொலையாளிகள் திருப்பி வைத்திருந்தனர். இது போலீஸ் விசாரணைக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. ஆனாலும் ரேகாவை கொலை செய்தவர்களை, அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து அடையாளம் கண்டு இருந்தார்கள். அதாவது அதே பிளவர் கார்டனை சேர்ந்த பீட்டர், அவரது கூட்டாளி சூர்யா ஆகிய 2 பேர் தான் என்று போலீசாரிடம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ரேகா கொலை பற்றிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் சிக்காமல் இருந்தாலும், அவரை கொலை செய்வதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்திருந்தார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
வீடியோ காட்சிகள்
அதாவது பிளவர் கார்டனில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து ரேகா வரும் போது, அவரை வழிமறித்து பீட்டர் மற்றும் சூர்யா கத்தியால் குத்துகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் ரேகா கீழே விழுகிறார். அப்போது அவரை பீட்டர் கண்மூடித்தனமாக கத்தியால் பலமுறை குத்துவதுடன், ரேகா எழுந்திருக்க கூடாது என்பதற்காக சூர்யாவும் கத்தியால் தலையில் தாக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் கொலையாளிகளிடம் இருந்து தப்பிக்க ரேகாவும் கூச்சலிடுகிறார். அவர் கூச்சலிடம் சத்தமும் வீடியோவில் தெளிவாக கேட்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக ரேகாவை 2 பேரும் கொலை செய்யும் போது, அங்கிருந்த சிலர் செய்வது அறியாமல் நின்று வேடிக்கை பார்க்கின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் இதனை தடுக்கும் நோக்கத்தில் அருகில் செல்கிறார். அவரை அங்கு கிடந்த பொருட்களால் 2 பேரும் தாக்க முயன்ற காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரேகாவின் கொலை வழக்கில் இந்த வீடியோ காட்சிகள் முக்கிய சாட்சி ஆதாரமாக இருக்கும் என்று போலீசாரும் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story