மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க சட்டசபை சிறப்பு கூட்டம்- சபாநாயகருக்கு, குமாரசாமி கடிதம்
மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று கோரி சபாநாயகர் காகேரிக்கு, குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரிக்கு, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ரூ.1 லட்சம் நிவாரணம்
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க நீண்ட நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தாங்கள் அறிந்ததே. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். மேலும் வாழ்வாதாரங்களை இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கிய உதவி மிக குறைவு.
அரசு மிக குறைந்த அளவிலேயே நிவாரண உதவி தொகுப்பு திட்டத்தை அறிவித்தது. இந்த தொகுப்பு திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பு அரசு எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். கொரோனாவால் இறந்தவர்களில் பி.பி.எல். ரேசன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதிலும் சில நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
பி.பி.எல். அல்லாத நடுத்தர குடும்பங்களும் கஷ்டத்தில் உள்ளன. அதனால் அந்த குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் நிவாரண தொகையும் குறைவாக உள்ளது. அதை அதிகரிக்க வேண்டும். அடுத்து கொரோனா 3-வது அலை தொடங்க உள்ளது. இதில் முன்பு நடைபெற்ற தவறுகள் நடைபெறாத வண்ணம் அரசு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுகுறித்து விவாதிக்க சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்.
கர்நாடக அரசின் நீர்ப்பாசனத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதில் 10 சதவீத கமிஷன் கைமாறி இருப்பதாக ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. ஒருவரே குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிடவில்லை. அதனால் நீங்கள் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
லஞ்சம் வாங்குவதாக புகார்
கலால்துறையில் அத்துறை மந்திரி அதிகாரிகள் மூலம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தில் 3 கலால்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் உயர் அதிகாரிகள் மற்றும் மந்திரியை இந்த அரசு பாதுகாக்கிறது. மாநில அரசு, ஒரு புறம் ஊழல் செய்கிறது, மற்றொருபுறம், ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது.
கலால்துறையில் ஊழல் புகார் எழுந்ததால் முன்பு அத்துறை மந்திரியாக இருந்தவர் ராஜினாமா செய்தார். இப்போது இருக்கிற மந்திரியை அரசு பாதுகாப்பது சரியல்ல. அரசு மீது எழுந்துள்ள இந்த ஊழல் புகார்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டியுள்ளது. சமூக வலைத்தளங்களில் கன்னடத்திற்கு ஏற்பட்ட அவமானம், மேகதாது திட்டத்தை தடுக்க முயற்சி செய்யும் தமிழ்நாடு, மத்திய அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும்.
கிடைக்கும் நன்மைகள்
கன்னடத்தை மத்திய ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம். அதனால் தாங்கள் கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story