கர்நாடகத்தில் கடந்த ஒரு ஆண்டில் போதைப்பொருட்கள் விற்றதாக 5,291 பேர் கைது- போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
கா்நாடகத்தில் கடந்த ஒரு ஆண்டில் போதைப்பொருட்கள் விற்றதாக 5,291 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
5,291 பேர் கைது
கர்நாடகத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள், பிற போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க அரசும், போலீஸ் துறையும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் போதைப்பொருட்களை வாங்கி பயன்படுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கர்நாடகத்தில் கடந்த ஒரு ஆண்டில் ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பிற மாவட்ட போலீசார் சேர்ந்து ரூ.50 கோடிக்கும் மேற்பட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக 4,066 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகள் தொடர்பாக ஒட்டு மொத்தமாக 5,291 பேர் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்கள் அழிப்பு
நாட்டிலேயே கர்நாடகத்தில் தான் போதைப்பொருள் விவகாரத்தில் பி.ஐ.டி., என்.டி.பி.எஸ் சட்டப்பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டம் குண்டர் சட்டத்திற்கு நிகரானது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுவதன் மூலம் கைதாகும் நபர்களுக்கு எளிதில் ஜாமீன் கிடைக்காது. வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட கர்நாடகத்தை சேர்ந்தவர்களும் இதே சட்டப்பிரிவின் கீழ் தான் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கர்நாடகத்தில் கடந்த ஒரு ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு மற்றும் பிற மாவட்ட தலைநகரில் அந்த போதைப்பொருட்கள் அனைத்தும் நாளை (அதாவது இன்று) அழிக்கப்பட இருக்கிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story