ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு


ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 Jun 2021 3:05 AM IST (Updated: 26 Jun 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

கல்லம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர்
கல்லம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி
ஊத்துக்குளி பேரூராட்சி ராக்கியாபாளைம்-2 ரேஷன் கடையில் கடந்த மாதம் வினியோகம் செய்யப்பட்ட அரிசி, மிகவும் தரமற்றதாகவும், அதேசமயம் கருப்பு நிறத்தில் மற்றும் துர்நாற்றம் வீசியதாகவும் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் தற்போது திருப்பூர் மாநகராட்சி 46-வது வார்டு ராயபுரம் கல்லம்பாளையத்தில் உள்ள அமுதம் ரேஷன் கடையில் நேற்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி தரமற்ற வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
ஊரடங்கு நேரத்தில் போதிய வருவாய் இன்றி வாழ்ந்து வருகிறோம். நாட்டில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள், பொதுவினியோகத்தை நம்பித்தான் உள்ளன. தற்போது எவ்வித வருவாயும் இல்லாத பல குடும்பங்களில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தான் மூன்று நேரத்துக்கான உணவாக உள்ளது.
நடவடிக்கை
கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதால், அதனை சமைத்து சாப்பிட முடியவில்லை. ரேஷன் கடைகளில் அரிசியின் தரம் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் உண்டு. இலவசமாக தருகிறார்கள் என்பதற்காக, தரமற்ற வகையில் அரிசி வினியோகிப்பது தவறான செயலாகும். எனவே திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உணவு சமைத்து சாப்பிட முடியாத வகையில் தரமற்ற அரிசியை ரேஷன் கடைகளில் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Next Story