கோவையில் தங்கி இருந்த சூடான் நாட்டு மாணவர் திருப்பூரில் கைது


கோவையில் தங்கி இருந்த சூடான் நாட்டு மாணவர் திருப்பூரில் கைது
x
தினத்தந்தி 26 Jun 2021 3:45 AM IST (Updated: 26 Jun 2021 3:45 AM IST)
t-max-icont-min-icon

முறையான ஆவணங்கள் இன்றி கோவையில் தங்கி இருந்த சூடான் நாட்டு மாணவர் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.

பெருமாநல்லூர்
முறையான ஆவணங்கள் இன்றி கோவையில் தங்கி இருந்த சூடான் நாட்டு மாணவர் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
பெட்ரோல் போட வந்தவர்
திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் பெட்ரோல் வாங்க பணம் தந்து உதவுமாறு அங்கிருந்தவர்களிடம் ஆங்கிலத்தில் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று கேட்டு உள்ளார். ஆனால் அவருடைய முக சாயல், தலைமுடி, உடல் அமைப்பு அனைத்தும்  இ்ந்தியநாட்டை சேர்ந்தவர் போல் இல்லை. 
இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருடைய பெயர் முகமது அல் முமுன் காலித் (வயது 22) எனவும், சூடான் நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. 
கைது
மேலும் விசாரணையில் இவர் படிப்பிற்காக கடந்த 2018-ம் ஆண்டு 6 மாத கால விசாவுடன் கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி இருந்து, தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். முன்னதாக ஈரோடு மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றிலும் படித்துள்ளார். இந்த நிலையில் இவர், தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில்  ஈரோட்டிலுள்ள நண்பர்களை பார்க்க நேற்று முன்தினம் சென்றுள்ளார். பின்னர் அங்கு நண்பர்களை பார்த்து விட்டு அங்கிருந்து நேற்று மீண்டும் கோவை திரும்பினார். 
 திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையம் பகுதியில் மோட்டார்சைக்கிள் வரும்போது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்துள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் வாங்க அந்த பகுதியில் இருந்தவர்களிடம் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து போலீசில் அவரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். மேலும் அவர் முறையான ஆவணங்களின்றி கோவையில்  தங்கியிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து முகமது அல் முமுன் காலித்தை கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story