13 அங்கன்வாடி மையங்களுக்கு தகுதி சான்றிதழ்கள் கலெக்டர் வழங்கினார்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13 அங்கன்வாடி மையங்களுக்கு தகுதி சான்றிதழ்கள் கலெக்டர் வழங்கினார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு கிடைக்க பெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள், உணவு வணிகர்கள், நுகர்வோர் அமைப்பு சார்ந்த உறுப்பினர்களுடன் மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் ஆர்த்தி கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவுகளை வழங்குவதுடன், அந்த மையங்களை மிகவும் சுகாதாரமாக பேணி காத்துள்ளதால், தேசிய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள 25 அங்கன்வாடி மையங்களை தணிக்கை செய்து அதில் 13 அங்கன்வாடி மையங்களை தேர்வு செய்து, காஞ்சீபுரம் கீழ்படப்பை அங்கன்வாடி மையத்திற்கு மிகச்சிறந்த (5 ஸ்டார்) ஈட் ரைட் கேம்பஸ் தகுதிச்சான்றும், மீதமுள்ள 12 அங்கன்வாடி மையங்களுக்கு சிறந்த (4 ஸ்டார்) ஈட் ரைட் கேம்பஸ் தகுதி சான்றும் வழங்கி உள்ளது.
குறிப்பாக தேசிய அளவில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும்தான் 13 அங்கன்வாடி மையங்களுக்கு ஈட் ரைட் கேம்பஸ் தகுதி சான்று வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் ஆர்த்தி 13 அங்கன்வாடி மையங்களுக்கு ஈட் ரைட் கேம்பஸ் தகுதி சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.எம்.சுதாகர், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர்.வி.கே.பழனி, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.அனுராதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story