பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சென்னை மாநகராட்சி முடிவு
கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சென்னை மாநகராட்சி முடிவு. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது.
சென்னை,
சென்னை மாநகராட்சியின் சார்பில் நாள்தோறும் சராசரியாக 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு மார்கெட் பகுதியில் 500 நபர்களுக்கும், காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் 500 நபர்களுக்கும், சிந்தாதரிபேட்டை மீன்மார்கெட் பகுதியில் 100 நபர்களுக்கும் நாள்தோறும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் இந்த பகுதிகளில் தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது.
தற்போது சென்னையில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ள நிலையில் மீண்டும் தொற்று பரவுதலை தடுக்க மாநகராட்சின் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், உதாரணமாக மார்க்கெட், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு அறிவித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு இயங்கும் இதர அங்காடிகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் நபர்களுக்கு சுழற்சி முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எனவே, கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க மேற்குறிப்பிட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு மக்கள் தங்களது முழுஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என சென்னை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story