புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள்-தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள்-தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி:
மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேனி எஸ்.பி.ஐ. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், எஸ்.யு.சி.ஐ. கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் வெண்மணி மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதேபோல் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ரவிமுருகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தொ.மு.ச. மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story