மயிலாடுதுறை மாவட்டம் விரைவில் முழுமையான காவல் மாவட்டமாக இயங்கும்
மயிலாடுதுறை மாவட்டம் விரைவில் முழுமையான காவல் மாவட்டமாக இயங்கும் என்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் விரைவில் முழுமையான காவல் மாவட்டமாக இயங்கும் என்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார்.
ஆய்வு
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் நேற்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்து ஒவ்வொரு நிலையங்களிலும் எவ்வளவு வழக்குகள் உள்ளது. அதில் விசாரணையில் உள்ள வழக்குகள், முடிக்கப்பட்ட வழக்குகள் குறித்தும், பொதுமக்கள், காவல்துறைக்கு இடையே உள்ள நட்புறவை பலப்படுத்த செய்ய வேண்டிய வழிமுறைகள், பொதுமக்களிடம் போலீசார் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ரவுடி பட்டியல் தயாரிப்பு
போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையில் மாவட்டத்திற்கான குற்றப்பதிவேடு ஆவணக்கூடம் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போன்ற தனி யூனிட்டுகள் எல்லாம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் விரைவில் முழுமையான காவல் மாவட்டமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் ரவுடியிசத்தில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டோர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு அறிவுரை
அதன் அடிப்படையில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ரவுடியிசத்தில் ஈடுபடக்கூடியவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் வழக்குகளை பொறுத்தவரை ஆன்லைன் வகுப்புகளுக்கு பாலியல் மற்றும் பெண்கள் மீதான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தெந்த பகுதிகளில் பெண்களுக்கு பாலியல்தொல்லைகள் அதிகமாக இருக்கிறது என்பதை கண்காணிக்க ஜி.பி.எஸ். மேபிங் செய்து அந்த பகுதிகளை நாம் கண்டுபிடித்து ரோந்து நடவடிக்கை அதிகரிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மணல்கடத்தல், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
10 போலீசாருக்கு வெகுமதி
பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மயிலாடுதுறை போலீஸ் நிலைய குற்றப்பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 10 போலீசாருக்கு ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வெகுமதி வழங்கினார். பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
நிவாரண உதவி
முன்னதாக சீர்காழி அருகே தென்னலக்குடி கிராமம் பள்ளிக்கூட தெருவில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து சீர்காழி அருகே செங்கமேடு பகுதியில் வசித்து வரும் ஆதரவற்ற மூத்தகுடிமக்கள் ஆகிய 2 பேரை சந்தித்து அவர்களுக்கு ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக், சீர்காழி இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story