கல்வராயன்மலையில் 3900 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 3900 லிட்டர் சாராய ஊறலை அழித்த போலீசார் 900 கிலோ எடையுள்ள வெல்லம் மற்றும் சர்க்கரை மூட்டைகளை பறிமுதல் செய்தனர்
கச்சிராயப்பாளையம்
சாராய வேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், வினோத்குமார், கரியாலூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் கல்வராயன்மலை அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ சர்க்கரை மூட்டை, 400 கிலோ வெல்லம் மூட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சாராய ஊறல் அழிப்பு
மேலும் தும்பராம்பட்டு ஆற்றில் சாராயம் காய்ச்சுவதற்காக 2,700 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அதை தரையில் கொட்டி அழித்தனர். இதுதொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
அதேபோல் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கல்வராயன் மலையில் உள்ள தேக்கு மரத்து வளவு கிராம ஓடையில் சோதனை செய்தபோது ராமர் மகன் மகேந்திரன் என்பவர் பதுக்கி வைத்திருந்த 1,200 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அவற்றை அழித்தனர். இதுதொடர்பாக மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
நடவடிக்கை
கல்வராயன்மலையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டு 3,900 லிட்டர் சாராய ஊறலையும் 400 கிலோ வெல்லம், 500 கிலோ சர்க்கரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கூறும்போது, கல்வராயன்மலை மட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்யும் செயலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story