வால்பாறையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமை சாவு


வால்பாறையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமை சாவு
x
தினத்தந்தி 26 Jun 2021 11:09 PM IST (Updated: 26 Jun 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமை பரிதாபமாக இறந்தது.

வால்பாறை

வால்பாறை வனச்சரக பகுதிக்கு உட்பட்ட ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் புதுக்காடு 23-ம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் காட்டெருமை உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் படுத்து கிடந்தது. இதையடுத்து வனச்சரகர் ஜெயச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் காட்டெருமையை பார்வையிட்டனர். 

பின்னர் சேறும் சகதியுமான புல்வெளி பகுதியில் இருந்து காட்டெருமையை தேயிலை தோட்ட பகுதிக்கு கயிறு கட்டி இழுத்தனர். தொடர்ந்து வால்பாறை அரசு கால்நடை டாக்டர் மெய்யரசு வரவழைக்கப்பட்டு காட்டெருமைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் காட்டெருமையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காட்டெருமை இறந்தது. இதனைத்தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில், காட்டெருமையின் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

 இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்தது 6 வயதுடைய ஆண் காட்டெருமை ஆகும். நுரையீரல் தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, உணவு சாப்பிட முடியாமல் காட்டெருமை இறந்துள்ளது என்றனர்.

Next Story