ராமநத்தம் அருகே மரத்தில் கார் மோதல்; குழந்தையுடன் தந்தை பலி தாய்க்கு தீவிர சிகிச்சை


ராமநத்தம் அருகே மரத்தில் கார் மோதல்; குழந்தையுடன் தந்தை பலி தாய்க்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 26 Jun 2021 11:14 PM IST (Updated: 26 Jun 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் குழந்தையுடன் தந்தை உயிரிழந்தார். மேலும் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


ராமநத்தம், 

சென்னை தரமணியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 37). இவரது மனைவி அருணா தேவி (31). இவர்களுக்கு 2 வயதில் ஆதவா என்கிற மகன் உள்ளான். இவர்கள் ஒரு காரில், நேற்று திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். காரை முத்து கிருஷ்ணன் ஓட்டினார். மாலை 3.30 மணியளவில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே அதர்நத்தம் என்கிற இடத்தில் இவர்களது கார் சென்று கொண்டிருந்தது. 

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. 

தந்தை-மகன் சாவு

இதில் காரின் இடிபாட்டிற்குள் சிக்கிய குழந்தை ஆதவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். முத்து கிருஷ்ணன், அருணாதேவி ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். 

அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, இடிபாட்டிற்குள் சிக்கிய கணவன், மனைவி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துகிருஷ்ணனும் பரிதாபமாக உயிரிழந்தார். 

தீவிர சிகிச்சை 

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அருணாதேவிக்கு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். 

 இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story