வருகிற 30-ந் தேதி கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்: தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகுகள் மராமத்து பணி மும்முரம்


வருகிற 30-ந் தேதி கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்: தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகுகள் மராமத்து பணி மும்முரம்
x
தினத்தந்தி 27 Jun 2021 12:16 AM IST (Updated: 27 Jun 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 30-ந் தேதி கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகிறார்கள். இதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகுகளை மராமத்து பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சேதுபாவாசத்திரம்:-

வருகிற 30-ந் தேதி கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகிறார்கள். இதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகுகளை மராமத்து பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

மீன்பிடி தடைகாலம்

மீன் இனப்பெருக்க காலம் என கூறி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல அரசு தடை விதித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் தடைகாலம் அமல்படுத்தப்பட்டது. கடந்த 15-ந் தேதியுடன் மீன்பிடி தடை காலம் நிறைவடைந்தது. கொரோனா 2-வது அலையின் தாக்கம் காரணமாக  தடை காலம் முடிவடைந்தாலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 
தற்போது கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் வருகிற 30-ந்  தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தஞ்சை மாவட்ட மீனவர்கள் தயாராகி வருகிறார்கள். 

லட்சக்கணக்கில் செலவு

இதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் போன்றவற்றை மராமத்து செய்யும் பணிகளில் மீனவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். படகுகளை பழுதுநீக்கம் செய்வதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவாவதாக மீனவர்கள் கூறுகின்றனர். 
இதுகுறித்து தமிழ்மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன் கூறுகையில், ‘படகுகள் தினந்தோறும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றால் சிறு சிறு வேலைகளை அவ்வப்போது செய்து தொழில் நடைபெற்று வரும். அதே சமயம் 61 நாட்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பதால் முழுமையாக மராமத்து பணிகள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சாதாரணமாக ஒரு விசைப்படகை கரையில் ஏற்றி சுத்தம் செய்து சில்லறை வேலைகள் பார்த்து வண்ணம் பூசி கடலுக்கு செல்வதற்கு மட்டும் குறைந்த பட்சம் ரூ.4 லட்சம் வரை செலவாகிறது.

நிதி உதவி

திருப்திகரமாக படகுகளை மராமத்து பார்ப்பதற்கு ரூ.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை செலவாகும். நலிந்து வரும் மீன்பிடி தொழிலை பாதுகாக்க தடை காலங்களில் மராமத்து பணிகளுக்காக அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்’ என்றார். 

Next Story