நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 214 பேருக்கு கொரோனா - 6 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 214 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதித்த 6 பேர் பலியாகி உள்ளனர்.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 43 ஆயிரத்து 739 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் அந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43,738 ஆக குறைந்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 214 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,952 ஆக அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் 309 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 41 ஆயிரத்து 489 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 2,052 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 405 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த பிள்ளைகளத்தூர், எலச்சிபாளையம், நடுப்பட்டி, ராசிபுரம், பொத்தனூர், வேம்படிதாளம் பகுதிகளை சேர்ந்த 6 பேர் பலியாகினர். இதனால் இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story