விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் அவரது குடும்பத்திற்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை


விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் அவரது குடும்பத்திற்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 27 Jun 2021 12:54 AM IST (Updated: 27 Jun 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் அவரது குடும்பத்திற்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை

பொங்கலூர்
பொங்கலூர் அருகே வங்கியில் பணம் எடுக்க முடியாததால் விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் அவரது குடும்பத்திற்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கி கடன்
பொங்கலூர் அருகே உள்ள மேற்குகுளம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் பொங்கலூரை அடுத்த கேத்தனூரிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பயிர் கடன் பெற்றுள்ளார். அதற்கு அவரது மகன் கனகராஜ் (வயது 53) உத்தரவாத கையெழுத்து போட்டுள்ளார். இந்த நிலையில் ரங்கசாமி கடன் பெற்ற சில மாதங்களிலேயே திடீரென இறந்துவிட்டார். 
இதனைத்தொடர்ந்து தந்தை பெற்ற கடனை உடனடியாக கட்ட வேண்டும் என்று அவரது மகன் கனகராஜூக்கு வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கனகராஜ் மேல் சிகிச்சைக்காக அதே வங்கியில் தனது கணக்கில் இருந்த பணத்தை எடுக்க சென்றுள்ளார். ஆனால் வங்கி தரப்பில் தந்தைக்கு உத்தரவாதம் அளித்துள்ளதால் பணத்தை எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனகராஜ் வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 
விவசாயி சாவு
இந்த சம்பவம் குறித்து அறிந்த உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வங்கி மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 
ஆனால் வங்கி மேலாளர் கடனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளதால் பணம் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் விவசாய சங்க நிர்வாகிகள் அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதால் பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இந்தநிலையில் கனகராஜ் சிகிச்சை பலனின்றி கோவை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். 
இழப்பீடு வழங்க வேண்டும்
இதனை அறிந்த விவசாய சங்க நிர்வாகிகள் சிகிச்சைக்கு பணம் எடுக்க தடை போட்டதால் தான் விவசாயி உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர். மேலும் அவரது குடும்பத்திற்கு வங்கி நிர்வாகம் ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வங்கி மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தியிடம் கேட்டபோது, அவரது தந்தை வாங்கிய கடனுக்கு கனகராஜ் உத்தரவாதம் அளித்துள்ளார். அவர் தனது வங்கி இருப்பில் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தில் ஏற்கனவே ரூ.1 லட்சம் எடுத்துவிட்டார். மீதமுள்ள ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொள்ள மேல் அதிகாரிகள் அனுமதி கொடுத்துள்ளனர். எனவே அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Next Story