மடத்துக்குளம் அருகே நான்கு வழிச்சாலை பணிகளுக்கான தளவாடங்களை திருடிய 3 பேர் கைது


மடத்துக்குளம் அருகே  நான்கு வழிச்சாலை பணிகளுக்கான தளவாடங்களை திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2021 1:10 AM IST (Updated: 27 Jun 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அருகே நான்கு வழிச்சாலை பணிகளுக்கான தளவாடங்களை திருடிய 3 பேர் கைது

போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே  நான்கு வழிச்சாலை பணிகளுக்கான தளவாடங்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்குவழிச்சாலை
மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து திண்டுக்கல் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ரூ 3 ஆயிரத்து 649 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் நடைபெறுகிறது. 
இந்த திட்டத்தில் தற்போது மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதிக்கு அருகில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி இரவில் அந்த பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் அமைக்க பயன்படுத்தப்படும் இரும்பு பிளேட்டுகள் 92 மற்றும் அவற்றை தாங்கும் ஜாக்கிகள் எனப்படும் இரும்பு கம்பிகள் ஆகியவற்றை  மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த மணிவாசகம் என்பவர்  மடத்துக்குளம் போலீசில்புகார் கொடுத்தார். 
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
3 பேர் கைது
மேலும் திருட்டு நடைபெற்ற பகுதிக்கு செல்லும் வழித்தடங்களில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வில்  உடுமலையை அடுத்த குறுஞ்சேரி பகுதியைச் சேர்ந்த  மந்திராச்சலம் (வயது 41) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த குடிமங்கலத்தையடுத்த சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்த நைனா என்பவரது மகன் மணிகண்டன் (26), குறுஞ்சேரியைச் சேர்ந்த அப்பச்சி என்பவரது மகன் மோகன்குமார் (26) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மந்திராச்சலம் உடல்நிலை பாதிப்பால் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
மேலும் இவர்களிடமிருந்து 80 இரும்பு பிளேட்டுகள் மற்றும் 31 ஜாக்கியை போலீசார் மீட்டனர்.அத்துடன் திருட்டுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Next Story