தர்மபுரி அருகே பரபரப்பு போலி பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை கொடுத்து அரசு பள்ளி ஆசிரியர் மோசடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
தர்மபுரி அருகே போலி பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே போலி பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரசு பள்ளி ஆசிரியர்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட ப.குட்டூர் அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் மகாலிங்கம் (வயது 51). கடந்த 1990-ம் ஆண்டு பிளஸ்-2 படிப்பை முடித்த இவர் பின்னர் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்வித்துறை சார்ந்த சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
அப்போது ஆசிரியர் மகாலிங்கம் பணியில் சேர்ந்தபோது கொடுத்த பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் மற்றும் இடைநிலை பட்டய படிப்புக்கான சான்றிதழ் தொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிய அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போலி மதிப்பெண் சான்றிதழ்
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அவருக்கு வழங்கப்பட்ட பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது மகாலிங்கம் பிளஸ்-2 தேர்வில் 582 மதிப்பெண்கள் பெற்று இருப்பது தெரியவந்தது.
அவர் பிளஸ்-2 தேர்வில் 972 மதிப்பெண்கள் பெற்றது போல போலி மதிப்பெண் சான்றிதழை தயாரித்து, பணியில் சேர்ந்தபோது சமர்ப்பித்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
வழக்குப்பதிவு
இதைத்தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் இந்த மோசடி குறித்து தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை கூடுதல் மதிப்பெண்கள் பெற்றது போல் போலியாக தயாரித்து இடைநிலை ஆசிரியர் பணியை பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த போலி மதிப்பெண் சான்றிதழை முன்னிலைப்படுத்தி அரசை ஏமாற்றி பணியில் சேர்ந்து மோசடி செய்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி மகாலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார் குறித்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து ஆசிரியர் மகாலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story