தேவகோட்டை,
தேவகோட்டை விநாயகர் கோவில் சொத்தை அபகரிப்பதற்காக கோட்டாட்சியர் பெயரில் போலி ஆவணம் தயாரித்த ஊர்காவல் படைவீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில் நிலம்
தேவகோட்டை சிலம்பணி விநாயகர் கோவில் தேவஸ்தானத்திற்கு பல ஏக்கர் நிலம் அம்மாச்சி ஊருணி பகுதியில் உள்ளது. அதில் உள்ள 14½ சென்ட் நிலம் கோவில் காவலாளி காளிமுத்து (வயது 60) என்பவர் உரிமை கொண்டாடி வந்தார். அந்த காலத்தில் கோவில் பணி செய்ததால் நிர்வாகி ஒருவர் பதிவு பெறாத கிரயத்தை காவலாளி காளிமுத்து பெயரில் கொடுத்த ஆவணம் உள்ளது. இருந்தாலும் அரசு ஆவணங்களில் கோவில் பெயரில் அந்த நிலம் இன்னமும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அந்த நிலத்தை தேவகோட்டை நகர் போலீஸ்நிலைய ஊர்க்காவல் படையில் பணிபுரியும் பாலாஜி என்பவர் ரூ.12 லட்சத்துக்கு விலை பேசி 3 தவணைகளில் 2¼ லட்சம் ரூபாயை காளிமுத்துவிடம் கொடுத்து உள்ளார்.
தாசில்தார் சந்தேகம்
பின்னர் சில நாட்களாக தொடர்ந்து பாலாஜியிடம் பாக்கி தொகையை காளிமுத்து கேட்டு வந்தார். இந்த நிலையில் தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் பெயரில் தேவகோட்டை தாலுகா அலுவலகத்திற்கு பட்டா வழங்க உத்தரவு இடப்பட்ட நகலை இணைத்து கோவில் இடத்திற்கு பட்டா கேட்டு காளிமுத்து பெயரில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை ஆய்வு செய்த தாசில்தார் ராஜரத்தினம், கோட்டாட்சியர் சுரேந்திரன் எப்போதும் தமிழில் கையெழுத்திடுவார். ஆனால் இந்த உத்தரவில் ஆங்கிலத்தில் கையெழுத்து இடப்பட்டிருந்தது. இதனால் அவருக்கு இந்த உத்தரவு மீது சந்தேகம் ஏற்பட்டது. தாசில்தார் காளிமுத்துவிடம் விசாரணை நடத்தினார். அந்த மனுவுக்கு எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் கைரேகை தான் வைப்பேன். கையெழுத்து போட தெரியாது என கூறினார்.
கோட்டாட்சியர் பெயரில்...
மேலும் ஊர்க்காவல் படை பாலாஜி என்பவரிடம் நிலத்தை விற்பனை செய்ததாக கூறினார். அந்த மனுவில் அலுவலக கோப்பு எண்ணும் இருந்தது.இதைக்கொண்டு தற்போதைய கோட்டாட்சியர் பிரபாகரன் பார்வைக்கு தாசில்தார் கொண்டு சென்றார். கோட்டாட்சியர் உத்தரவின்பேரில் மனுவை ஆராய்ந்த போது இதுபோல எந்த உத்தரவும் இடப்படவில்லை. கோட்டாட்சியர் பெயரில் போலியாக உத்தரவு தயார் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தேவகோட்டை தாசில்தார் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
3 பேர் கைது
ஊர்க்காவல் படையில் பணிபுரியும்பாலாஜியை பிடித்து விசாரணை நடத்தியபோது போலியாக கோட்டாட்சியர் பெயரில் ஆவணங்கள் தயார் செய்து தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றிவிடலாம் என முயற்சித்தது தெரிய வந்தது. இந்த போலி ஆவணத்தை தேவகோட்டை ராம்நகரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் காந்தி ரோட்டில் வசிக்கும் சண்முகசுந்தரம் (31) என்பவர் ரூ.1½ லட்சம் வாங்கிக் கொண்டு தயார் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு உடந்தையாக தாணிச்சா வூரணி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (57) புரோக்கராக செயல்பட்டு உள்ளார். இந்த 3 பேரையும் பிடித்து போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பலரை தேடி வருகின்றனர்.