பழனியில் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த தோட்ட தொழிலாளர்கள்
பழனியில் கொத்தடிமைகளாக நடத்துவதாக கூறி தோட்ட தொழிலாளர்கள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
நெய்க்காரப்பட்டி:
பழனி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு நேற்று மாலை 3 பெண்கள் உள்பட 20 பேர் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போலீசாரிடம் புகார் ஒன்றை தெரிவித்தனர். அதாவது, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட பகுதியை சேர்ந்த எங்களை கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த ஒருவர் தோட்ட வேலைக்காக பழனிக்கு அழைத்து வந்தார். உணவு, தங்குமிடம் என அனைத்தையும் தோட்ட பகுதியில் ஏற்பாடு செய்திருந்தார். நெய்க்காரப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள கரும்பு தோட்டங்களில் நாங்கள் தங்கியிருந்து வேலை செய்து வந்தோம். கடந்த சில நாட்களாக எங்களுக்கு போதிய உணவு, சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை. இதுபற்றி அவரிடம் கேட்டபோது எங்களை அடித்து துன்புறுத்துகிறார். பணம் ஏதும் கொடுக்காததால் ஊருக்கும் செல்ல முடியவில்லை. எங்கள் குடும்பத்தினருக்கும் தகவல் ஏதும் தெரிவிக்க முடியவில்லை. மேலும் எங்களை தோட்ட பகுதியில் இருந்து வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. இதனால் நாங்கள் கொத்தடிமைகளாக இருந்து வந்தோம். இந்நிலையில் அங்கிருந்து தப்பித்து வந்துள்ளோம். எனவே எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.
இதுகுறித்து போலீசார் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பழனி தாசில்தார் வடிவேல்முருகன் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தார். தொடர்ந்து அவர்களிடம் தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தோட்ட தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story