சொத்து தகராறில் தாயை குத்திக்கொன்ற மகன்
விக்கிரமசிங்கபுரம் அருகே சொத்து தகராறில் தாயை குத்திக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஆலடியூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாடகலிங்கம் மனைவி உலகம்மாள் (வயது 78). இவரது மகன் முத்துச்சாமி (52). இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உலகம்மாள் தனது வயல் பகுதியை விற்றதாக தெரிகிறது. இதனால் முத்துச்சாமி தனது தாய் மீது ஆத்திரத்தில் இருந்தார். இதுகுறித்து அவர், உலகம்மாளிடம் கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் வீடு அருகே உள்ள கடைக்கு உலகம்மாள் நடந்து சென்றார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த முத்துச்சாமி பெற்ற தாய் என்றும் பாராமல் உலகம்மாளை முதுகில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உடனடியாக விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிவதானு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உலகம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சொத்து தகராறில், பெற்ற தாயை மகன் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story