நெல்லை அருகே விவசாயி சரமாரி வெட்டிக்கொலை


நெல்லை அருகே விவசாயி சரமாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 27 Jun 2021 1:56 AM IST (Updated: 27 Jun 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே விவசாயி மர்மநபர்களால் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் நியூ காலனியை சேர்ந்தவர் பாபு (வயது 42), விவசாயி. மேலும் மீன் குளத்தை குத்தகைக்கு எடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவர் நேற்று மாலையில் ராஜவல்லிபுரம் சாலையில் நின்று கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பாபு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  அவர்கள் பாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, பாபு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்த பயங்கர கொலை குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாபு குத்தகைக்கு எடுத்த குளத்தில் சிலர் மீன்பிடித்து உள்ளனர். அவர்களை பாபு கண்டித்தார். இந்த முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், இந்த கொலை தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 6 பேைர பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story