முகநூல் மூலம் பழகி 17 வயது சிறுவனை திருமணம் செய்த இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது


முகநூல் மூலம் பழகி 17 வயது சிறுவனை திருமணம் செய்த இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 27 Jun 2021 2:57 AM IST (Updated: 27 Jun 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் முகநூல் மூலம் பழகி 17 வயது சிறுவனை காதல் திருமணம் செய்த 20 வயது இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு:

17 வயது சிறுவன்

  சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பிரம்மசமுத்திரா கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இந்த சிறுவன் அதிநவீன வசதி கொண்ட செல்போன் ஒன்றை பயன்படுத்தி வருகிறான். மேலும் அந்த செல்போனில் வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களையும் அவன் பயன்படுத்தி வருகிறான்.

  இந்த நிலையில் முகநூல்(பேஸ்புக்) மூலம் அந்த சிறுவனுக்கு, பெங்களூவைச் சேர்ந்த ரூபா(வயது20) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகி வந்த இவர்கள் பின்னர் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசி வந்தனர். அது இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்தது.

காதலுக்கு பச்சைக்கொடி

  அதாவது முதலில் ரூபா தான் தன்னுடைய காதலை அந்த சிறுவனிடம் தெரிவித்துள்ளார். அப்போது அந்த சிறுவன் தனக்கு 17 வயது தான் ஆகிறது என்று கூறி காதலை ஏற்க மறுத்துள்ளார். ஆனால் அந்த சிறுவனிடம் தொடர்ந்து தனது காதலை ரூபா வெளிப்படுத்தி வந்துள்ளார். இதனால் அந்த சிறுவன் ரூபாவின் காதலை ஏற்றுக் கொண்டார்.

  இதையடுத்து இருவரும் பெங்களூருவிலும், பிரம்மசமுத்திரா கிராமத்திலும் அடிக்கடி சந்தித்து பேசினர். ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. பின்னர் இரு வீட்டாரும் பேசி காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். மேலும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

கோவிலில் திருமணம்

  அதன்படி கடந்த 16-ந் தேதி ரூபாவுக்கும், அந்த சிறுவனுக்கும் பிரம்மசமுத்திரா கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரூபாவும், அந்த சிறுவனும் பிரம்மசமுத்திரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் 17 வயது சிறுவனை, இளம்பெண் திருமணம் செய்திருப்பதாக கூறி சக்கராயப்பட்டணா குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

  அதன்பேரில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரி சகீர் தாஜ் தலைமையிலான அதிகாரிகள், சக்கராயப்பட்டணா போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கைது

  அப்போது 17 வயதே ஆன சிறுவனை ரூபா காதல் திருமணம் செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரூபாவை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story