பொன்னாக்குடியில் ஒரு வாரத்தில் பாலம் அமைக்கும் பணி தொடங்கும்; சபாநாயகர் தகவல்


பொன்னாக்குடியில் ஒரு வாரத்தில் பாலம் அமைக்கும் பணி தொடங்கும்; சபாநாயகர் தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2021 3:05 AM IST (Updated: 27 Jun 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிக்காக பொன்னாக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

நெல்லை:
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒவ்வொரு ஆண்டும் 13 ஆயிரத்து 758 மில்லியன் கன அடி நீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இந்த தண்ணீரை மழைக்காலங்களில் வறண்ட பகுதியான நெல்லை மாவட்டம் ராதாபுரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, திசையன்விளை தாலுகா பகுதிக்கும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பகுதிக்கும் கொண்டு செல்வதற்காக மத்திய அரசின் நீர்வளத்துறை மற்றும் ஆறுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் 2009-ல் தொடங்கப்பட்டது.

மேலும் தாமிரபரணி ஆற்றில் இருந்து பிரியும் புதிய வெள்ளநீர் கால்வாயுடன், பச்சையாறு, கருமேனியாறு, நம்பியாறு ஆகியவற்றையும் இணைக்கும் திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இந்த திட்டம் நதிநீர் இணைப்பு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டம் வெள்ளாங்குளியில் தொடங்கி திசையன்விளை அருகே எம்.எல்.தேரி வரையிலும் 75 கி.மீ.க்கு தாமிரபரணி நீர்  கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக தாமிரபரணி ஆற்றின் கன்னடியன் கால்வாயில் இருந்து புதிய கால்வாய் தோண்டப்பட்டது. அப்போது ரூ.369 கோடி மதிப்பீட்டில் திட்டம் தொடங்கப்பட்டது. கால்வாய் பணிகள் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டன. வெள்ளாங்குளியில் இருந்து பச்சையாறு வரையிலும் முதல் கட்ட பணிகளும், அங்கிருந்து மூலைக்கரைப்பட்டி வரை 2-ம் கட்ட பணிகளும் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்றது. அதன்பிறகு 2016-ம் ஆண்டு வரை பணி நடைபெறவில்லை. இதனால் திட்ட மதிப்பீடு ரூ.873 கோடிக்கு உயர்ந்தது. தற்போது 3-வது, 4-வது கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை பகுதியை சேர்ந்த 32 கிராமங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் வட்டாரத்தை சேர்ந்த 18 கிராமங்களும் பயன்பெறும். அதாவது 42 ஆயிரம் ஏக்கர் புதியபாசன பரப்பு உள்பட 57 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், 252 குளங்கள் மற்றும் 5,220 கிணறுகள் பயன்பெறும்.

இந்த திட்டப்பணிகள் விரைவாக நடந்தாலும் தண்ணீர் வரவேண்டுமானால் பொன்னாக்குடி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாலம் அமைத்தால் தான் தண்ணீர் கொண்டு வர முடியும். எனவே பொன்னாக்குடி பாலத்தையும், செங்குளம் ரெயில்வே பாலத்தையும் விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது ராதாபுரம் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று சபாநாயகரான அப்பாவு சமீபத்தில் வெள்ளநீர் கால்வாய் திட்டப் பணிகளை ஆய்வு செய்து விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இந்த பணிகள் தற்போது விரைவாக நடந்து வருகிறது.

இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-
கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எனக்கு வாக்கு சேகரிக்க வந்த மு.க.ஸ்டாலின், திசையன்விளையில் வைத்து வெள்ள நீர் கால்வாய் திட்டம் அமைக்கப்படும் என்று கூறினார். 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பணிகள் நடந்தது. அதன்பிறகு பணிகள் நடைபெறவில்லை. தற்போது பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
பொன்னாக்குடியில் நான்கு வழிச்சாலையின் குறுக்கே தண்ணீர் செல்லும் வகையில் பாலம் அமைக்க ரூ.17 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படும்.

இதேபோல் செங்குளத்தில் கால்வாய்க்கு மேலாக ெரயில்வே பாலம் அமைக்க ெரயில்வே துறைக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டு ஒரு பாலத்திற்கான பணிகள் முடிந்து விட்டது. அதில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் உத்தரவை தொடர்ந்து போக்குவரத்து தொடங்கும். அதன்பிறகு அடுத்த பாலப்பணி உடனே தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story