திருமங்கலம்-செங்கோட்டை நான்கு வழிச்சாலை; விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்


திருமங்கலம்-செங்கோட்டை நான்கு வழிச்சாலை; விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2021 3:27 AM IST (Updated: 27 Jun 2021 3:27 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம்-செங்கோட்டை நான்கு வழிச்சாலை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

தென்காசி;
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை ரூ.1,147 கோடி செலவில் மத்திய அரசு நான்கு வழிச்சாலை அமைக்க உள்ளது. இதற்காக நிலங்களை கையகப்படுத்த ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ் திருமங்கலம் முதல் செங்கோட்டை வரை சுமார் 147 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க, மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பணிகளுக்கான திட்ட இயக்குனர் வேல்ராஜ் தலைமையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளிடம் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தனுஷ்குமார் எம்.பி., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த வழித்தடத்தில் நான்கு வழிச்சாலையை அமைக்காமல் விவசாயத்தை பாதிக்காத வகையில் மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கூட்டத்திற்கு பிறகு தனுஷ்குமார் எம்.பி. கூறும்போது, ‘தமிழகத்தில் முந்தைய அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளாமல் ஒரு திட்டத்தை அனுமதித்து விட்டது. அதுதொடர்பாக விவசாயிகள் பல முறை போராட்டங்கள் நடத்தினர். தற்போது புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் மாற்றுப்பாதையில் விவசாயிகளை பாதிக்காத வகையில் சாலையை அமைக்க முடியுமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். விவசாய நிலங்களை பாதிக்காத அளவில்தான் சாலை அமைக்கப்பட வேண்டும். இப்போது திட்டமிட்டுள்ள இடத்தின் வழியாக சாலையை அமைக்கக்கூடாது என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள். நாங்களும் அவர்களுடன் உறுதுணையாக இருக்கிறோம். னவே இதுசம்பந்தமாக விரைவில் முதல்-அமைச்சரை சந்தித்து மக்களுக்கு பயனுள்ளதாக சாலையை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்’ என்றார்.

விவசாய சங்க பிரதிநிதிகள் கூறும்போது, ‘இந்த பாதையில் முப்போகம் விளையும் நன்செய் நிலங்கள், தென்னை, வாழை, நெல்லி, எலுமிச்சை போன்ற தோப்புகள் மற்றும் குடியிருக்கும் வீடுகள் உள்ளன. எனவே விவசாயத்தை பாதிக்காத வகையில் பாததையை அமைக்க கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம்’ என்றனர்.

Next Story