பூந்தமல்லி மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் ‘வாக்கி-டாக்கி’ கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்


பூந்தமல்லி மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் ‘வாக்கி-டாக்கி’ கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்
x
தினத்தந்தி 27 Jun 2021 11:33 AM IST (Updated: 27 Jun 2021 11:33 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள ‘வாக்கி-டாக்கி’ கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண், 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு கீழே இறங்கி வந்தார்.

பூந்தமல்லி, 

திருவேற்காட்டை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 42). இவருடைய மனைவி ராஜூலா. இவர்களுக்கு பிள்ளைகள் உள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ராஜூலா கணவரை விட்டு பிரிந்து சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று திருவேற்காட்டுக்கு வந்த ராஜூலா, தனக்கு நகை மற்றும் பணம் வேண்டும் என கணவரிடம் கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபற்றி திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். ஆனால் பெண்கள் சம்பந்தப்பட்ட புகார் என்பதால் பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்றபோது, அங்கு புகாரை வாங்க போலீசார் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜூலா, மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள சுமார் 200 அடி உயரம் கொண்ட ‘வாக்கி-டாக்கி’ கோபுரத்தில் ஏறினார். சுமார் 80 அடி உயரத்தில் ஏறி அமர்ந்து கொண்ட அவர், அங்கிருந்து குதிக்க போதவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

அவரை கீழே இறங்கி வரும்படி மகளிர் போலீசார் வலியுறுத்தினர். அங்கு வந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் கையெடுத்து கும்பிட்டும் அவரது கணவர், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதும் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார். மேலே எறி மீட்கச் சென்ற போலீசாரையும் மேலே வர விடாமல் தடுத்தார்.

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இங்கு வரவேண்டும் என கூறினார். அங்கிருந்த பூந்தமல்லி நகர தி.மு.க. செயலாளர் ரவிக்குமார், தனது செல்போனில் உதயநிதி ஸ்டாலினுக்கு வீடியோ கால் செய்வதாக கூறினார்.

இதையடுத்து 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு அந்த பெண், கீழே இறங்கி வந்தார். அவருக்கு போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story