பொள்ளாச்சியில் போலீசார் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி


பொள்ளாச்சியில் போலீசார் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 27 Jun 2021 3:23 PM IST (Updated: 27 Jun 2021 3:23 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் போலீசார் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் போலீசார் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் 250 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

250 பேருக்கு தடுப்பூசி

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆலோசனையின் பேரில், பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு தமிழ்மணி தலைமையில், நேற்று பொள்ளாச்சி உட்கோட்டத்தை சேர்ந்த போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

பொள்ளாச்சி காவலர் திருமண மண்படத்தில் நடந்த இந்த முகாமில் மொத்தம் 250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக தடுப்பூசி போட வந்தவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது.

டாக்டர்கள் அறிவுரை

தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா தடுப்பு குறித்து டாக்டர்கள் அறிவுரை வழங்கினர். அப்போது, வீட்டைவிட்டு வெளியே வரும்போதும், பணியின்போதும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

அடிக்கடி கைகளை கிருமிநாசினி அல்லது சோப்பு மூலம் சுத்தம் செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும். சளி, காய்ச்சலுக்கு சுயமாக மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல் உடனடியாக டாக்டர்களை அணுக வேண்டும் என்று கூறினர். 

இந்த முகாமில், கோவை ஆயுதப்படை துணை சூப்பிரண்டு தென்னரசு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். 
இதேபோல், நேற்று சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் சுமார் 500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Next Story