கிணத்துக்கடவில் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்


கிணத்துக்கடவில் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 Jun 2021 3:24 PM IST (Updated: 27 Jun 2021 3:25 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கொரோனா தடுப்பூசி

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் எடுத்த தீவிர நடவடிக்கையால் தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. கிணத்துக்கடவு தாலுகாவில் இதுவரை ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். ஆரம்பத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் தயக்கம் காட்டினர். இதையடுத்து தடுப்பூசி குறித்து சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததாலும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதேபோல கிராம புறங்களிலும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

கிணத்துக்கடவு பகுதியில் நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் முதல் கட்டமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பின்னர் கிராமங்களுக்கு சென்று முகாம் நடத்தி தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட சமுதாய நலக்கூடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் காலை முதலே தடுப்பூசி மையம் முன்பு குவிந்தனர்.

இதையடுத்து அவர்களை வரிசையில் நிற்க வைத்து டோக்கன் வழக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டு சென்றனர். 

874 பேருக்கு போடப்பட்டது

இதேபோல் நல்லட்டிபாளையம், கல்லாபுரம், மன்றாம்பாளையம் ஆகிய கிராமங்களிலும் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த பணிகளை நல்லட்டிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா, டாக்டர்கள் சமீதா, முகில்வண்ணன், பிரித்திகா, பிரபு ஆகியோர் கண்காணித்தனர். நேற்று ஒரே நாளில் கிணத்துக்கடவு தாலுகாவில் மொத்தம் 874 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதேபோல் பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் உள்ள பேரூராட்சி பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அங்கும் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்தோடு தடுப்பூசிகளை போட்டு சென்றனர்.

Next Story