பிளஸ்-1 மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டல்


பிளஸ்-1 மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டல்
x
தினத்தந்தி 27 Jun 2021 10:10 PM IST (Updated: 27 Jun 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ரூ.10 லட்சம் தராவிட்டால் பிளஸ்-1 மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டிய போலீஸ்காரர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்தவர் சரவணன் மகன் விஷால். இவருக்கும், விழுப்புரம் திருநகர் மருதம் கார்டனை சேர்ந்த 20 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்கள் ஆனார்கள். 
இதன் மூலம் அந்த வாலிபரின் சகோதரியான 15 வயதுடைய மாணவிக்கும் விஷாலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணவி தற்போது விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வருகிறார். விஷால், அடிக்கடி மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார். 

ஆபாச வீடியோக்களை அனுப்பினார் 

அப்போது மாணவியின் செல்போனுக்கு விஷால் ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுந்தகவல்களை அனுப்பியதாக தெரிகிறது. இதை பார்த்து மாணவி, அதிர்ச்சி அடைந்தார். மேலும் விஷால், மாணவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, உனது படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்றும், அவ்வாறு செய்யாமல் இருக்க ரூ.10 லட்சம் தர வேண்டும் என்றும் கூறி மிரட்டி உள்ளார்.  இதற்கு விஷாலி்ன் நண்பரான திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்தவரும், ஆந்திர மாநிலத்தில் மத்திய ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவருமான சரவணன் என்பவரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

2 பேர் மீது வழக்கு 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, நடந்தது குறித்து தனது தாயிடம் கூறி அழுதார். இது தொடர்பாக மாணவியி்ன் தாய், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விஷால், சரவணன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தில்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story