வெள்ளப்பெருக்கின் போது சேதமடைந்த ஒகேனக்கல் அருவிகளை சீரமைப்பது குறித்து கூடுதல் கலெக்டர் ஆய்வு
கடந்த காலங்களில் வெள்ளப்பெருக்கின் போது சேதமடைந்த ஒகேனக்கல் அருவிகளை சீரமைப்பது குறித்து கூடுதல் கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு செய்தார்.
பென்னாகரம்:
சுற்றுலா தலம்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக ஒகேனக்கல் திகழ்ந்து வருகிறது. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் அருவிகளில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வது வழக்கம். தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் வெள்ளப்பெருக்கின் போது ஒகேனக்கல் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தது. தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுவதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூடுதல் கலெக்டர் ஆய்வு
இந்தநிலையில் தர்மபுரி மாவட்ட கூடுதல் கலெக்டர் வைத்தியநாதன் ஒகேனக்கல்லில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பழுதடைந்த மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த பகுதிகளை சீரமைப்பது, சுற்றுலா தலத்தை மேம்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது ஒகேனக்கல் கூட்டு திட்ட பொறியாளர் சங்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், வடிவேல், ஒன்றிய பொறியாளர்கள் சீனிவாசன், சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகா, கேரளா மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story