ஏரியூரில் இருந்து மேச்சேரிக்கு மதுபாட்டில்கள் கடத்திய 7 பேர் கைது 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


ஏரியூரில் இருந்து மேச்சேரிக்கு மதுபாட்டில்கள் கடத்திய 7 பேர் கைது 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Jun 2021 10:26 PM IST (Updated: 27 Jun 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

ஏரியூரில் இருந்து மேச்சேரிக்கு மதுபாட்டில்கள் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 320 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏரியூர்:

கூடுதல் விலைக்கு விற்பனை
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனிடையே தர்மபுரி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததால் டாஸ்மாக் கடைகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் மற்றும் சந்து கடைகளில் மது விற்பவர்கள் மாவட்ட எல்லையான தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்க தினமும் குவிகின்றனர். குறிப்பாக பொம்மிடி, தொப்பூர், ஏரியூர், பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அவர்கள் மதுபாட்டில்களை வாங்கி வெளிமாவட்டங்களுக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். 
7 பேர் கைது
இந்தநிலையில் மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க ஏரியூர் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏரியூரில் இருந்து சேலம் மாவட்டம் மேச்சேரிக்கு சென்ற இருசக்கர வாகனம், கார், சரக்கு வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் சாக்குப்பை, பெட்டிகளில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. மதுபாட்டில்கள் கடத்திய மேச்சேரி பகுதியை சேர்ந்த சசி (வயது 34), சசிகுமார் (40), சண்முகம் (45), நசியனூர் சுப்பிரமணி (34), வேலமங்கலம் அய்யனார் (40) உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 320 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story