வால்பாறையில் சாலையில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரிப்பு
வால்பாறையில் சாலையில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதுடன் சண்டை போட்டு மிரள்வதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் சாலையில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதுடன் சண்டை போட்டு மிரள்வதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
சாலையில் சுற்றும் கால்நடைகள்
மலைப்பிரதேசமான வால்பாறையில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் காட்டு யானை, சிறுத்தை, காட்டெருமை ஆகியவை ஊருக்குள் நடமாடி வருகிறது.
இதைத்தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், கால்நடைகளை வெளியே திரிய விட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் வால்பாறை நகர் பகுதியில் உள்ள பொள்ளாச்சி மெயின் ரோடு, நகராட்சி மார்க்கெட் பகுதி மற்றும் பல்வேறு இடங் களில் ஆடு, மாடுகள் அதிகளவில் சுற்றுகின்றன.
அடிக்கடி விபத்துகள்
குறிப்பாக மெயின் ரோட்டில் ஹாயாக வலம் வருவதால், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க திடீரென்று மாடுகள் ஒன்றுக்கொன்று சண்டைபோடுகின்றன.
அப்போது மற்ற மாடுகள் மிரள்கிறது. இதன் காரணமாக அவை சாலையில் வேகமாக ஓடுகின்றன. இதன் காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் செல்லும்போது அவர்களையும் மாடுகள் துரத்துகின்றன.
இதன் காரணமாக சாலையில் செல்லவே பொதுமக்களுக்கு பயமாக இருக்கிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பொதுமக்கள் பீதி
கூட்டங்கூட்டமாக சுற்றும் ஆடுகள் மற்றும் மாடுகள் திடீரென்று சாலையில் வேகமாக ஓடுகின்றன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும்போது குறுக்கே பாய்வதால் விபத்துகள் ஏற்பட்டு, பலத்த காயங்களுடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது.
மேலும் கால்நடைகள் ஊருக்குள் சுற்றித்திரிவதால், அவற்றை வேட்டையாட தேயிலை தோட்டங்களுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கிறது. சில நேரங்களில் அவை குடியிருப்பு பகுதிக்குள்ளும் புகுந்து விடுகிறது.
இதனால் பொதுமக்கள் பீதியுடன் இருக்கும் நிலை நீடித்து உள்ளது.
தடுக்க வேண்டும்
இதனால்தான் கால்நடைகளை வளர்ப்பவர்கள் வீட்டு வளாகத்துக்குள் கட்டி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் யாரும் அதை கேட்பது இல்லை.
எனவே நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, சாலையில் கால்நடைகளை திரிய விடுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கால்நடைகள் சாலையில் சுற்றுவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story