கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற சொகுசு பஸ் பல்லடம் அருகே திடீர் என தீப்பிடித்தது


கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற சொகுசு பஸ் பல்லடம் அருகே  திடீர் என தீப்பிடித்தது
x
தினத்தந்தி 27 Jun 2021 11:59 PM IST (Updated: 27 Jun 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற சொகுசு பஸ் பல்லடம் அருகே திடீர் என தீப்பிடித்தது

பல்லடம்
கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற சொகுசு பஸ் பல்லடம் அருகே  திடீர் என தீப்பிடித்தது. இதில் பஸ்சின் முன் பகுதி எரிந்து நாசம் ஆனது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பஸ்சில் தீப்பிடித்தது
பல்லடம் அருகே உள்ள ஆராக்குளம் பிரிவில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென முன்பக்கம் புகை வந்ததால் அதன் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார். 
கீழே இறங்கி பார்ப்பதற்குள் பஸ்சின் முன்புறம் மளமளவென தீப்பிடித்தது. டிரைவரும், அவருடன் வந்த வரும் இறங்கி அந்த வழியே சென்ற வாகனங்களை நிறுத்தி பல்லடம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.
முன்பகுதி சேதம்
 சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்குள் பஸ்சின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்து டிரைவர் இருக்கை மற்றும் பின்புற இருக்கைகள் எரிந்து சாம்பலானது. 
அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் பயணம் செய்யாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. அங்கிருந்த போலீசார் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை நிறுத்தி மாற்றுப் பாதையில் வாகனங்களை அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
 இதுகுறித்து பல்லடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சொகுசு பஸ் மதுரையைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு சொந்தமானது என்பதும் வடமாநில தொழிலாளர்களை அழைத்துச்சென்று பீகார் மாநிலத்தில் இறக்கிவிட்டு விட்டு கோவையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் போது பல்லடத்தில் விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. 
பஸ்சை அருப்புக் கோட்டையைச் சேர்ந்த தெய்வேந்திரன்(வயது42) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மதுரையைச் சேர்ந்த ராமதாஸ்( 35) என்பவரும் உடன் வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. 

Next Story