குளித்தலையில் வழிகாட்டும் பெயர் பலகை பொருத்தும் பணி மந்தம்
குளித்தலையில் வழிகாட்டும் பெயர் பலகை பொருத்தும் பணி மந்தமாக நடக்கிறது. இதனை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை
வாகனங்கள்
கரூர் மாவட்டம், குளித்தலை நகரத்தில் உள்ள சுங்ககேட் பகுதியில் 4 திசைகளிலும் சாலைகள் உள்ளன. இந்த 4 திசைகளிலும் உள்ள சாலைகளின் வழியாக திருச்சி, கரூர், மணப்பாறை, முசிறி உள்பட பல ஊர்களின் மார்க்கமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கிய ஊர்களுக்கும், பல வெளி மாநிலங்களுக்கும் பஸ், லாரி, வேன், கார் போன்ற வாகனங்கள் சென்று வருகின்றன.
அதுபோல கரூர் மாவட்ட பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கிராம பகுதிகளுக்கு குளித்தலை சுங்ககேட் பகுதி வழியாக பலர் பயனம் செய்து வருகின்றனர். குளித்தலை நகரப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களுக்கு குளித்தலை சுங்ககேட் ஒரு முக்கிய மையப் பகுதியாக இருந்துவருகிறது. இந்தநிலையில் குளித்தலை சுங்ககேட் வழியாக உள்ள நான்கு திசைகளில் உள்ள சாலைகள் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூரைச் சேர்ந்தவர்களும் பயணம் செய்து வருகின்றனர்.
சிரமம்
அதுபோல் பயணம் செய்பவர்கள் தாங்கள் செல்லவேண்டிய ஊர்களுக்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் வழிகாட்டும் பெயர் பலகை சுங்ககேட் பகுதியில் இல்லாமல் இருந்துவந்தது. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வந்தனர்.
இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் வழி தெரியாமல் சிலநேரங்களில் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் குளித்தலை சுங்ககேட் பகுதியில் நான்கு திசைகளிலும் உள்ள ஊர்களை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டும் பெயர் பலகை அமைக்க வேண்டும் என கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டுவந்தது.
வாகன ஓட்டிகள் கோரிக்கை
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளித்தலை சுங்ககேட்- முசிறி செல்லும் சாலையில் வழிகாட்டும் பெயர் பலகை நெடுஞ்சாலைத்துறை மூலம் வைக்கப்பட்டது. ஆனால் குளித்தலை சுங்ககேட்- மணப்பாறை சாலையில் வழிகாட்டும் பெயர் பலகை வைக்கப்படவில்லை.
இந்தப் பெயர் பலகை வைப்பதற்காக குழாய்கள் பொருத்தப்படும் வேலை மந்தமாக நடக்கிறது. இதனால் இன்னும் பெயர் பலகை வைக்கப்படாமலேயே இருந்து வருகிறது. எனவே தாமதமாக நடைபெறும் இந்த பெயர்பலகை பொருத்தும் பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story