பொதுமக்களை நேரில் சந்தித்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேட்டி


பொதுமக்களை நேரில் சந்தித்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 28 Jun 2021 12:14 AM IST (Updated: 28 Jun 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.

கரூர்
மக்கள் சபை நிகழ்ச்சி
கரூர் நகராட்சிக்குட்பட்ட இனாம் கரூர் பகுதியில் உள்ள 9 வார்டுகளில் நேற்று மக்கள் சபை நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேரில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரில் மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
 கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் நேரடியாக சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலான மக்கள் சபை நிகழ்ச்சி வாரந்தோறும் நடத்தப்படவுள்ளது. 
30 நாட்களில் தீர்வு
இந்நிகழ்வில் அந்த இடங்களிலேயே தீர்வு காணக்கூடிய வகையில் உள்ள மனுக்களுக்கு உடனுக்குடன் ஆணைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகள் சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு நேரில் வழங்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.
16 வாகனங்கள் தொடக்க நிகழ்ச்சி
பின்னர் கரூர் மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தலா ஒரு சுகாதாரத்துறை வாகனம் மற்றும் ஒரு 108 அவசரகால ஊர்தி என 16 வாகனங்களை பயன்பாட்டிற்காக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கரூர் ஏமூர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்வை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கொரோனா கால நிவாரணம் 
கரூரில், இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் என 320 பேருக்கு கொரோனா கால நிவாரணமாக தலா ரூ.4 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசியுடன் 15 வகையான மளிகைப்பொருட்கள் வழங்கும் நிகழ்வினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பின்னர் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 20 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், புகளூர் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சி திட்ட நிதியின் மூலம் 19 பேருக்கு செயற்கைகால் உபகரணங்கள் என மொத்தம் ரூ.15 லட்சத்து 93 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

Next Story