கொரோனாவுக்கு இறந்தவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மானியத்துடன் கடன் வசதி


கொரோனாவுக்கு இறந்தவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மானியத்துடன் கடன் வசதி
x
தினத்தந்தி 28 Jun 2021 12:37 AM IST (Updated: 28 Jun 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

வருமானம் ஈட்டக்கூடியவர்கள் கொரோனா தொற்றால் இறந்திருந்தால் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மானியத்துடன் குறைந்த வட்டிக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,
-
வருமானம் ஈட்டக்கூடியவர்கள் கொரோனா தொற்றால் இறந்திருந்தால் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மானியத்துடன் குறைந்த வட்டிக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கடன் வசதி

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கொரோனா தொற்றால் இறந்த வருமானம் ஈட்டக்கூடிய ஆதிதிராவிட மக்களின் குடும்பத்தை சேர்ந்தவருக்கு தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழக நிறுவனத்தால் மானியத்துடன் குறைந்த வட்டியில் திரும்பச் செலுத்தும் கடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம்.இதில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக :ரூ.4 லட்சம் வரை நிறுவனத்தால் கடன் வழங்கப்படும்.
மீதமுள்ள 20 சதவீதம் அல்லது ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்த கடனுக்கு ஆண்டுக்கு 6.5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் 6 ஆண்டுகளில் திரும்ப செலுத்தலாம். இதில் பயன்பெற விரும்புவோர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும். கொரோனா தொற்றால் இறந்த குடும்ப வருமானம் ஈட்டக்கூடியவர்களின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். கொரோனா தொற்றினால் இறந்ததற்கான தகுந்த ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இதுதொடர்பாக சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை நேரடியாக அல்லது 04575 - 299514 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

பிற்படுத்தப்பட்டோர்

இதே போல் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருப்பின் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக்கழகம்  மூலம் மானியத்துடன் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படஉள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த குடும்ப வருமானம் ஈட்டக்கூடியவரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத்தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் கொரோனா வைரசால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story