கொடைக்கானல் டாக்டர் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி பண மோசடி செய்ய முயற்சி
கொடைக்கானல் டாக்டர் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி பண மோசடி செய்ய முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொடைக்கானல்:
சமீபகாலமாக போலீஸ், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பெயரில் முகநூலில் போலியாக கணக்கு தொடங்கி, அவர்கள் பண உதவி கேட்பது போன்று கேட்டு நண்பர்களிடம் பண மோசடி செய்யும் சம்பவம் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில், கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் இளம்வழுதி என்பவரது பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கியதுடன், அந்த முகநூல் கணக்கின் மெசேஞ்சர் மூலம் டாக்டரின் நண்பர்களிடம் பண உதவி வேண்டும் என்று கேட்டு மோசடி செய்ய முயற்சி நடந்தது. அவ்வாறு முகநூல் கணக்கு மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய மர்மநபர்கள், இளம்வழுதியின் முகநூல் நண்பர்களிடம் கூகுள்-பே, போன்பே உள்ளிட்ட பண பரிவர்த்தனை செயலி இருக்கிறதா? என்று கேட்டு, அப்படி செயலி இருந்தால் அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றும், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என வெவ்வேறு தொகைகள் அனுப்புமாறு கேட்டுள்ளனர்.
இதுகுறித்து இளம்வழுதியின் நண்பர்கள் சிலர், அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததுடன், இது உண்மையா எனவும் விசாரித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்வழுதி, தான் அவ்வாறு முகநூல் கணக்கு தொடங்கவில்லை எனவும், அது போலியானது எனவும் தெரிவித்தார்.
மேலும் அந்த முகநூல் கணக்கை நம்பி யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அவர் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் மோசடி செய்ய முயன்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story