50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பஸ்கள் இயக்கம்


50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 28 Jun 2021 1:31 AM IST (Updated: 28 Jun 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

50 சதவீத பயணிகளுடன் மதுரையில் இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுகிறது

மதுரை
50 சதவீத பயணிகளுடன் மதுரையில் இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.
அரசு பஸ்கள்
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்காரணமாக கடந்த மாதத்தில் இருந்து பஸ்கள் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்புள்ள மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி தந்து உள்ளது. அதன்படி மதுரையில் இன்று(திங்கட்கிழமை) முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் பொது மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வகை-2 மற்றும் வகை-3-ல் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவீதமும், தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும் இயங்க அனுமதி வழங்கபட்டு உள்ளது. அதன் அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலத்தின் மூலம் 100 சதவீத பணியாளர்கள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல் பரிசோதனை
மேலும் 27 மாவட்டங்களுக்கு இடையே 50 சதவீத பயணிகள் போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே குளிர்சாதன பஸ்கள் நீங்கலாக 714 நகர பஸ்கள் மற்றும் 120 புறநகர் பஸ்கள் என மொத்தம் 834 பஸ்கள் இயக்கப்படும். அதில் மகளிர் இலவச பஸ்களும் அடங்கும். மேலும் வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பதை கண்காணித்து பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்கும் பொருட்டு பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பஸ் நிறுத்தங்களில் சிறப்பு கண்காணிப்பு பணிக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பஸ்களிலும் பயணம் செய்யும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியினை பின்பற்றி அனைவரும் கொரோனா அச்சமின்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story