நெல்லையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது; வாகன ஓட்டிகள் அவதி


நெல்லையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது; வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 28 Jun 2021 1:54 AM IST (Updated: 28 Jun 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். 

பெட்ரோல் 

கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்து கொண்டே வந்தது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

ரூ.100-ஐ தாண்டியது 

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தொட்டது. நெல்லை மாநகர பகுதியில் நேற்று முன்தினம் ரூ.99.55 இருந்த பெட்ரோல் விலை நேற்று மேலும் உயர்ந்து ரூ.99.88 ஆக இருந்தது. 
அதே நேரத்தில் நெல்லை புறநகரான களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.11-க்கு விற்பனை செய்யப்பட்டது. நெல்லை மாநகரில் டீசல் விலையும் 1 லிட்டர் ரூ.93.68 ஆக உயர்ந்துள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.

வாடகை அதிகரிப்பு

பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியதால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் வாடகையும் நேற்று கூடுதலாக நிர்ணயம் செய்து வசூலித்தனர்.
அதாவது நெல்லை மாநகர பகுதியில் குறைந்தபட்சமாக ரூ.40 என்றிருந்த வாடகை ரூ.50 ஆக உயர்த்தினர்.

Next Story