புறநகர் ரெயில் திட்டத்தால் பெங்களூருவை சுற்றியுள்ள நகரங்களுக்கு விரைவான போக்குவரத்து வசதி - எடியூரப்பா தகவல்


கெம்பேகவுடா சிலைக்கு எடியூரப்பா மலர் தூவி மரியாதை செய்தார்.
x
கெம்பேகவுடா சிலைக்கு எடியூரப்பா மலர் தூவி மரியாதை செய்தார்.
தினத்தந்தி 28 Jun 2021 2:00 AM IST (Updated: 28 Jun 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

புறநகர் ரெயில் திட்டத்தால் பெங்களூருவை சுற்றியுள்ள நகரங்களுக்கு விரைவான போக்குவரத்து வசதி கிடைக்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு:

கெம்பேகவுடா ஜெயந்தி

  கர்நாடக அரசின் கெம்பேகவுடா வளர்ச்சி ஆணையம் சார்பில் 512-வது கெம்பேகவுடா ஜெயந்தி விழா பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

  கெம்பேகவுடா வளர்ச்சி ஆணையம் சார்பில் நடைபெறும் இந்த விழாவை மகிழ்ச்சியாக தொடங்கி வைத்துள்ளேன். பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் கெம்பேகவுடா ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் முடிந்த பிறகு இதை பயன்படுத்தி கெம்கேவுடாவின் வரலாற்றை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கெம்பேகவுடா தொலைநோக்கு பார்வையுடன் கட்டமைத்த பெங்களூரு நகரம் இன்று உலக புகழ் பெற்று திகழ்கிறது.

கோவில்களை கட்டமைத்தார்

  பெங்களூருவில் மற்றும் அதனை சுற்றுப்புறத்தில் ஆறுகள் இல்லை. அதனால் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நகரில் பல்வேறு ஏரிகள்-குளங்களை உருவாக்கினார். கெம்பாபுதி, அல்சூர் உள்ளிட்ட ஏரிகளை உருவாக்கினார். பெங்களூருவில் பல்வேறு இடங்களில் சிறு சிறு தொழிற்பேட்டைகளை அமைத்து, நகரை தொழில் நகரமாக மாற்றினார். இந்த பெருமை அவரையே சேரும்.

  நகரில் பல்வேறு கோவில்களை கட்டமைத்தார். பூங்காக்களை உருவாக்கினார். சாலையோரங்களில் மரங்களை நட்டு அனைத்து நிலைகளிலும் பெங்களூருவை முன்மாதிரி நகரமாக அமைத்தார். கல்வி, சுகாதாரம், சமூக நீதிக்கு அவர் ஆற்றிய சேவை அளப்பரியது. பாரம்பரிய தலங்களை மேம்படுத்தி பாதுகாக்கும் பணியை மாநில அரசு செய்து வருகிறது.

முழுமையான வளர்ச்சி

  கெம்பேகவுடாவுக்கு 108 அடி உயரத்தில் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சிலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பெங்களூரு மிஷன்-2022 திட்டத்தின் கீழ் எளிமையான போக்குவரத்து, பசுமை, தூய்மையான பெங்களூருவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்து நெரிசல் பிரச்சினை தீர்க்கப்படும். பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பெங்களூருவை சுற்றியுள்ள நகரங்களுக்கு விரைவான போக்குவரத்து தொடர்பு வசதி ஏற்படுத்தப்படுகிறது.

  பெங்களூருவின் முழுமையான வளர்ச்சியை கருத்தில் கொண்டு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. பெங்களூருவை உலக அளவில் சிறப்பான நகரமாக மாற்ற எங்கள் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. பெங்களூருவின் முழுமையான வளர்ச்சிக்கு பிரதமர் மோடி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உதவி செய்து வருகிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அஞ்சல் தலை

  கெம்பேகவுடாவின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. அவரது பெயரில் கடித தபால் கவரும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கெம்பேகவுடாவின் பெயர் மக்களின் மனதில் நிலைத்து இருக்கும்.
  இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

  இந்த விழாவில் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க சுவாமி, துணை முதல்-மந்திரிகள் அஸ்வத் நாராயண், கோவிந்த் கார்ஜோள், மந்திரிகள் கோபாலய்யா, நாராயணகவுடா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story