பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வாங்கும் போலீசார் மீது சட்ட நடவடிக்கை - கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை
பெங்களூருவில் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வாங்கும் போலீசார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பெங்களூரு:
பொதுமக்களிடம் பிரச்சினைகளை...
பெங்களூருவில் கொரோனா ஊரடங்கு காரணமாக போலீஸ் நிலையத்திற்கு வந்தோ அல்லது உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்தோ தங்களது பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்து, சமூக வலைதளங்கள் மூலமாக பெங்களூரு நகரவாசிகளின் பிரச்சினைகள், புகார்களை போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கேட்டு அறிந்து வருகிறார்.
அதன்படி, டுவிட்டர் மூலமாக பொதுமக்களின் பிரச்சினைகள், குறைகள், புகார்களை போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கேட்டு அறிந்து கொண்டார். அப்போது பொதுமக்கள் கேட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் கூறியதாவது:-
ரோந்து பணி தீவிரம்
பெங்களூருவில் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் வாகனங்கள் அதிக அளவில் திருட்டுப்போவதாக புகார்கள் வந்துள்ளன. வாகன திருட்டை தடுக்க வீடுகள் முன்பு கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியை போலீஸ் துறை மேற்கொண்டு வருகிறது.
அத்துடன் வாகன திருட்டை தடுக்க, அந்தந்த போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசாரின் இரவு நேர ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். இதன்மூலம் வாகன திருட்டு தவிர மற்ற திருட்டுகள் நடைபெறும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகாரின்பேரில் வழக்கு
வரதட்சணை கொடுமை விவகாரத்தில் ஆண்கள் மீது போலீசார் சாட்சி, ஆதாரங்கள் இல்லாமல் பெண்கள் கொடுக்கும் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்படுவதாக சிலர் கூறுகின்றனர். இது உண்மையில்லை.
எந்த ஒரு வழக்கையும் பதிவு செய்யும் போது, சாட்சி, ஆதாரங்கள் இல்லாமல் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மாட்டார்கள். ஒருதலை பட்சமாகவும் போலீசார் செயல்பட மாட்டார்கள். என்றாலும், ஆண்கள் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக பொய் புகார் வந்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.
கண்டிப்பாக நடவடிக்கை
பெங்களூருவில் பொதுமக்களிடம் இருந்து போலீசார் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் லஞ்சம் வாங்குவதை சகித்து கொள்ள மாட்டேன். போலீசார் லஞ்சம் வாங்கியதாக புகாரோ, அதுபற்றி எனது கவனத்திற்கு வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பற்றிய தகவல்கள் சேரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, அவர்களை பெங்களூருவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
இவ்வாறு கமல்பந்த் கூறினார்.
Related Tags :
Next Story