தந்தையை அரிவாளால் வெட்டிவிட்டு மகன் தற்கொலை முயற்சி


தந்தையை அரிவாளால் வெட்டிவிட்டு மகன் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 28 Jun 2021 2:07 AM IST (Updated: 28 Jun 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே தந்தையை அரிவாளால் வெட்டி விட்டு மகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுரண்டை:
சுரண்டை அருகே, தந்தையை அரிவாளால் வெட்டி விட்டு மகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

 சொத்து தகராறு

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீரசிகாமணி பகுதியைச் சேர்ந்தவர் தர்மர் (வயது 55). இவருக்கு இரண்டு மகன்கள்.
மூத்த மகன் இசக்கிமுத்து (25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆகவில்லை. தந்தையிடம் கடந்த சில ஆண்டுகளாக சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க கூறி சண்டையிட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த சில வருடங்களாக தர்மருக்கும், இசக்கிமுத்துவுக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அரிவாள் வெட்டு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தந்தை-மகன் இருவருக்கும் சொத்து சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து அரிவாளால் தனது தந்தையை வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த தர்மர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்கொலை முயற்சி

இந்தநிலையில் இசக்கிமுத்துவும் விஷம் தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் இசக்கிமுத்துவும் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சேர்ந்தமரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story