கேரளா, மராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
கேரளா, மராட்டிய மாநிலங்களில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு:
ஆதங்கம் இல்லை
நாட்டில் கொரோனா 2-வது அலை குறைந்துள்ளது. ஆனால் மராட்டியம், கேரளாவில் கொரோனா பரவல் குறைந்து இருந்தாலும் அவை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மேலும் அந்த 2 மாநிலங்களிலும் உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.
அதனால் அண்டை மாநிலமான கர்நாடகம் சற்று ஆதங்கத்தில் உள்ளது. இதனால் அந்த 2 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் இதுவரை 2 பேருக்கு மட்டுமே டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் 600-க்கும் மேற்பட்ட மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுகள் இன்று (அதாவது நேற்று) வரும். இந்த உருமாற்றம் அடைந்த வைரசால் மராட்டியம், மத்தியபிரதேசத்தில் ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய ஆதங்கம் கர்நாடகத்தில் இல்லை.
தடுப்பூசி போடாதவர்கள்
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா, மராட்டிய எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் அந்த மாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்களை கொரோனா தாக்கினால் அவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படும். அதனால் ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடும் வரை அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தடுப்பூசி போடும் பணி
பள்ளிகளை திறப்பதாக இருந்தால் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு அவசியம் தடுப்பூசி போட வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். கர்நாடகத்தில் இதுவரை 40 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு சண்டை போடுவது என்பது தொடக்கத்தில் இருந்தே இருக்கிறது. இது ஒன்றும் புதிது அல்ல. தலித் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு காங்கிரசில் முதல்-மந்திரி பதவியோ அல்லது பிரதமர் பதவியோ கிடைக்காது.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story