அவினாசியில் பதுங்கி இருந்த இந்து முன்னணி நிர்வாகி, நண்பர் கைது


அவினாசியில் பதுங்கி இருந்த இந்து முன்னணி நிர்வாகி, நண்பர் கைது
x
தினத்தந்தி 28 Jun 2021 2:15 AM IST (Updated: 28 Jun 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வாகன தணிக்கையின்போது போலீசாருக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் அவினாசியில் பதுங்கி இருந்த இந்து முன்னணி நிர்வாகி மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்

சேலம்
சேலத்தில் வாகன தணிக்கையின்போது, போலீசாருக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் அவினாசியில் பதுங்கி இருந்த இந்து முன்னணி நிர்வாகி மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
வாகன தணிக்கை
சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் போலீசார் சோதனைச் சாவடி அமைத்து கொரோனா ஊரடங்கு விதிமீறல்களை மீறும் நபர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த 26-ந் தேதி வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முககவசம் அணியாமல் வந்த முரளி என்பவரை பிடித்து ரூ.200 அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த நபரின் நண்பரும், சூரமங்கலம் ஒன்றிய இந்து முன்னணி செயலாளருமான செல்லபாண்டியன் மற்றும் அவரது நண்பர் தமிழரசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து கொண்டு கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்லியம் ஜேம்ஸ் மற்றும் போலீசாருடன் இந்து முன்னணி நிர்வாகி சரமாரியாக கேள்விகளை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வைரலாக பரவிய வீடியோ
இந்த காட்சியை அங்கிருந்த நபர் ஒருவரால், செல்போனில் பதிவு செய்யப்பட்டு, வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டது. இதனால் அந்த வீடியோ வைரலாக பரவியது.
அந்த வீடியோவில், ‘டூட்டி போட்டா சும்மா வந்து உட்கார்ந்துட்டு போயிடனும். தேவையில்லாமல் வழக்கு போடக்கூடாது. செக்போஸ்ட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன். போலீசாரின் சங்கை அறுத்து விடுவேன்’ என இந்து முன்னணி நிர்வாகி செல்லபாண்டியன் மிரட்டிய காட்சிகள் பதிவாகி இருந்தது.
4 பிரிவுகளில் வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்லியம் ஜேம்ஸ் புகார் அளித்தார். அதன்பேரில், இந்து முன்னணி நிர்வாகி செல்லபாண்டியன் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மத உணர்வை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
அதேசமயம் போலீசார் தேடுவதை அறிந்த செல்லபாண்டியன் மற்றும் அவரது நண்பர் தமிழரசன் ஆகிய 2 பேரும் தலைமறைவாகிவிட்டதால் அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடிவந்தனர்.
அவினாசியில் கைது
இந்த நிலையில், செல்லபாண்டியன் பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தபோது அவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொண்டலாம்பட்டி போலீசார் நேற்று காலை அவினாசிக்கு சென்று அங்கு உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த இந்து முன்னணி நிர்வாகி செல்லபாண்டியன் மற்றும் அவரது நண்பர் தமிழரசன் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். 
பின்னர் அவர்களை அங்கிருந்து சேலத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி செல்லபாண்டியன், பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மெத்தை தயாரிக்கும் தொழில் செய்து வரும் இவர், இந்து முன்னணியில் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். மற்றொருவரான அவரது நண்பர் தமிழரசன் கொண்டலாம்பட்டியில் வசித்து வருகிறார். கைது செய்யப்பட்ட இருவரையும் கொரோனா பரிசோதனைக்கு போலீசார் உட்படுத்தியுள்ளனர். அதன் முடிவு வந்தவுடன் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொறுப்பில் இருந்து நீக்கம்
இதனிடையே செல்லபாண்டியன், இந்து முன்னணி அமைப்பின் ஒன்றிய செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கி வைக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story