சகோதரர் திருமணத்திற்கு 2 நாட்கள் விடுமுறை கேட்டு கிராம பஞ்சாயத்து தலைவருக்கு கடிதம் எழுதிய உறுப்பினர்


சகோதரர் திருமணத்திற்கு 2 நாட்கள் விடுமுறை கேட்டு கிராம பஞ்சாயத்து தலைவருக்கு கடிதம் எழுதிய உறுப்பினர்
x
தினத்தந்தி 28 Jun 2021 2:26 AM IST (Updated: 28 Jun 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

தாவணகெரே அருகே சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்ள 2 நாட்கள் விடுமுறை கேட்டு, கிராம பஞ்சாயத்து தலைவருக்கு, உறுப்பினர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து அனுமதி பெற்ற சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

கிராம பஞ்சாயத்து உறுப்பினர்

  தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா காரிகனூரு கிராம பஞ்சாயத்தில் உறுப்பினராக இருந்து வருபவர் சேத்தன்குமார். இவர், ஆரோஹள்ளி வார்டில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார்.

  சேத்தன்குமார், பிரபல நடிகர் உபேந்திராவின் உத்தம பிரஜாகியா கட்சியை சேர்ந்தவர் ஆவார். கிராம பஞ்சாயத்து தேர்தலில் சேத்தன்குமார் வெற்றி பெற்ற பின்பு, அவரை நடிகர் உபேந்திரா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

  இந்த நிலையில், தனது சகோதரர் திருமணத்திற்காக 2 நாட்கள் விடுமுறை கேட்டு சேத்தன்குமார் கிராம பஞ்சாயத்து தலைவருக்கு கடிதம் எழுதி இருப்பதன் மூலம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சேத்தன்குமாரின் சகோதரருக்கு 28-ந் தேதி (அதாவது இன்று) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

விடுமுறை கேட்டு கடிதம்

  இதில் கலந்து கொள்வதற்காக தனக்கு 2 நாட்கள் விடுமுறை வேண்டும் என்று கோரி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிக்கு, உறுப்பிரான சேத்தன்குமார் கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். மேலும் அந்த 2 நாட்களும் பஞ்சாயத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகளிலும், மற்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்க அனுமதி அளிக்கும்படியும் அந்த கடிதத்தில் சேத்தன்குமார் கூறி இருந்தார்.

  இதையடுத்து, அவருக்கு 2 நாட்கள் விடுமுறை எடுத்து கொள்ள கிராம பஞ்சாயத்து தலைவர் அனுமதி வழங்கி உள்ளார். பொதுவாக பொது வாழ்வில் இருப்பவர்கள் இதுபோன்று நடந்து கொள்வது இல்லை என்றும், சேத்தன்குமாரின் இந்த செயல் பாராட்டுக்குரியது என்றும் காரிகனூரு பஞ்சாயத்து தலைவரும், வளர்ச்சித்துறை அதிகாரியும் தெரிவித்துள்ளனர். விடுமுறை கேட்டு சேத்தன்குமார் எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story