முன்னாள் பெண் கவுன்சிலா் கொலையில் கணவரின் சகோதரி-மகன் கைது


முன்னாள் பெண் கவுன்சிலா் கொலையில் கணவரின் சகோதரி-மகன் கைது
x
தினத்தந்தி 28 Jun 2021 2:39 AM IST (Updated: 28 Jun 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நடந்த மாநகராட்சி முன்னாள் பெண் கவுன்சிலர் கொலையில் கணவரின் சகோதரி, அவருடைய மகனை போலீசார் கைது செய்திருப்பதாகவும், அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

பெங்களூரு:

5 பேர் கைது

  பெங்களூரு காட்டன்பேட்டை அருகே பிளவர் கார்டனை சேர்ந்தவர் ரேகா கதிரேஷ். இவர், பெங்களூரு மாநகராட்சி செலுவாதி பாளையா வார்டு முன்னாள் கவுன்சிலர் ஆவார். கடந்த 24-ந் தேதி பிளவர் கார்டனில் உள்ள தனது அலுவலகம் அருகே வைத்து ரேகா குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலும் கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. பின்னர் காட்டன்பேட்டை போலீசார், பிளவர் கார்டனை சேர்ந்த பீட்டர், அவரது கூட்டாளிகள் சூர்யா, ஸ்டீபன், அஜய், ஸ்டீபன் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் பீட்டர், சூர்யாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்திருந்ததால், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 3 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மாநகராட்சி தேர்தல் விவகாரம்

  போலீஸ் விசாரணையில், ரேகாவுக்கும், பீட்டருக்கும் இடையே மாநகராட்சி ஒப்பந்த பணிகளை செய்ததில் ரூ.18 லட்சம் பில் தொகையை கொடுக்காததால் பிரச்சினை ஏற்பட்டதாகவும், இந்த விவகாரம் காரணமாக கொலை நடந்திருப்பதாகவும் கூறப்பட்டது. அதே நேரத்தில் பீட்டருக்கு பின்னணியில் மேலும் சிலர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  அதாவது அடுத்த ஆண்டு (2022) பெங்களூரு மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தலில் செலுவாதி பாளையா வார்டில் பா.ஜனதா சார்பில் ரேகா போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியானது தெரிகிறது. ஆனால் அந்த வார்டில் ரேகா கணவர் கதிரேசின் சகோதரி மாலா தனது மகள் அல்லது மருமகளை போட்டியிட வைக்க முடிவு செய்திருந்ததாகவும் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ரேகாவுக்கும், மாலாவுக்கும் பிரச்சினை இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைது

  அதே நேரத்தில் ரேகா பீட்டரின் பில் தொகையை நிறுத்தி வைத்ததில் ஏற்பட்ட மோதலை சாதகமாக பயன்படுத்தி, ரேகாவை கொலை பீட்டரை மாலா தூண்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து மாலா, அவரது மகன் அருணை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

  இதனை மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் மறுத்துள்ளார். ரேகா கொலையில் 5 பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மாலா மற்றும் அவரது மகன் அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் ரேகா கொலை சம்பந்தமாக மேலும் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story